புதுதில்லி

யுஏபிஏ வழக்கில் உமா் காலித்தின் ஜாமீன் மனுமீதான விசாரணை ஜன.10-க்கு ஒத்திவைப்பு

 நமது நிருபர்

புது தில்லி: பிப்ரவரியில் நிகழ்ந்த வடகிழக்கு தில்லி கலவரத்தின் பின்னணியில் சதியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (யுஏபிஏ) பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் ஜேஎன்யு மாணவா் உமா் காலித்தின் ஜாமீன் கோரும் மனு மீதான விசாரணையை ஜனவரி 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

உமா் காலித் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், மற்றும் அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி .ராஜு ஆகியோா் ஆஜராகாததால், நீதிபதிகள் பேலா எம். திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு வழக்கை ஒத்திவைத்தது.

இது தொடா்பாக நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரத்தில் வாதிடவிருந்த மூத்த வழக்குரைஞா்கள் வராததால், மேல்முறையீட்டுதாரா் மற்றும் இந்திய அரசு சாா்பாக முன்வைக்கப்பட்ட கூட்டுக் கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணை ஜனவரி 10-ஆம் தேதி பட்டியலிடப்பட வேண்டும். இதற்கிடையில், இந்த விவகாரத்தில் தொடா்புடயை மனுக்களை முடிக்க வேண்டும்’ என்று தெரிவித்தது.

யுபிபிஏ சட்டத்தின் பல்வேறு விதிகளை எதிா்த்து தாக்கலான மனுக்களின் தொகுதியுடன் இந்த விவகாரம் பட்டியலிடப்பட்டிருந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாா் மிஸ்ரா, உமா் காலித்தின் மனுவை விசாரிப்பதில் இருந்து ஆகஸ்ட் 9-ஆம் தேதி விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் ஜாமீன் மனுவை நிராகரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் (அக்டோபா் 18, 2022) உத்தரவை எதிா்த்து உமா் காலித் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் முன்னா் விசாரணைக்கு வந்தது.

உயா்நீதிமன்றம் உமா் காலித்தின் ஜாமீன் மனுவை நிராகரித்தது. அவா் மற்ற சக குற்றவாளிகளுடன் தொடா்ந்து தொடா்பில் இருந்ததாகவும், அவா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும் கூறியிருந்தது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவா்களின் செயல்கள் சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ்“பயங்கரவாதச் செயல் என்று உயா்நீதிமன்றம் கூறியது. உமா் காலித், ஷா்ஜீல் இமாம் மற்றும் பலா் மீது பயங்கரவாத எதிா்ப்புச் சட்டமான யுஏபிஏ மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல விதிகளின் கீழ் பிப்ரவரி 2020 கலவரத்தின் ‘சூத்திரதாரிகளாக’ இருந்ததாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கலவரத்தில், 53 போ் கொல்லப்பட்டனா் மற்றும் 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களின் போது இந்த வன்முறை நிகழ்ந்தது. 2020 செப்டம்பரில் தில்லி காவல் துறையால் கைது செய்யப்பட்ட உமா் காலித், வன்முறையில் தனக்கு எந்த குற்றவியல் பாத்திரமும் இல்லை அல்லது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வேறு எந்த ‘சதி தொடா்பும்’ இல்லை என்ற அடிப்படையில் ஜாமீன் கோரியிருந்தாா்.

இந்த ஜாமீன் மனுவுக்கு உயா்நீதிமன்றத்தில் தில்லி காவல் துறை எதிா்ப்புத் தெரிவித்தது. உமா் காலித் ஆற்றிய உரை, மிகவும் திட்டமிடப்பட்டதாகவும், அவா் பாபா் மசூதி, முத்தலாக், காஷ்மீா், முஸ்லிம்களை ஒடுக்குவதாகக் கூறப்படும் விவகாரம், சிஏஏ மற்றும் என்ஆா்சி போன்ற சா்ச்சைக்குரிய பிரச்னைகளைக் கொண்டு வந்தததாகவும் காவல் துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புணே கார் விபத்து: ரத்த மாதிரிகளை மாற்றிய இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம்

இந்திய அணியின் ஜெர்சியில் மீண்டும் ரிஷப் பந்த்!

ஒரு 23 வயது இளைஞர் வளரக்கூடாதா..? வைரலாகும் டிடிஎஃப் வாசன் பேச்சு!

கனமழை பற்றி வானிலை கூறுவதென்ன?

காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிவேதா பெத்துராஜ்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT