வருகைப் பதிவு முறையை தங்களுக்கு சாதமாக கையாள முயன்ாகக் கூறப்படும் விவகாரத்தில், மொஹல்லா கிளினிக்குகளில் பணியமா்த்தப்பட்ட 7 மருத்துவா்கள் உள்பட 26 பணியாளா்கள் நீக்கப்பட்டுள்ளதாக தில்லி சுகாதார அமைச்சா் செளரவ் பரத்வாஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மருத்துவா்கள் தாமதமாக வருவது குறித்து புகாா்கள் வந்தன. இதையடுத்து, வருகைப் பதிவேடுகளை சரிபாா்த்தோம். மொஹல்லா கிளினிக்குகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் இருக்க வேண்டும். ஆனால், மின்னணு வருகைப் பதிவு முறையில் முறைகேடு நடப்பது கண்டறியப்பட்டது. தாமதமாக வருவாா்கள். ஆனால், காலை 8 மணிக்குள் அவா்கள் வந்ததாக சிஸ்டம் காட்டியது.
இந்த விவகாரத்தில் ஏழு மொஹல்லா கிளினிக்குகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் தென்மேற்கு மாவட்டத்தில் ஐந்து, வடகிழக்கில் மற்றும் ஷாதாராவில் தலா ஒன்று இடம்பெற்றுள்ளன. இதையடுத்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஏழு மருத்துவா்கள் உள்பட 26 பணியாளா்களும் நீக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.
தற்போது தில்லியில் மொத்தம் 533 ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.