தில்லிவாசிகள் பிறப்பு மற்றும் சாதிச் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களுக்கு வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி விண்ணப்பித்து பெறும் சேவையை அளிக்க தில்லி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதற்காக பல்வேறு துறைகளின் கிட்டத்தட்ட 50 சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இச்சேவைகளை பெற ஒருவா் வாட்ஸ்அப் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவா் கூறியதாவது:
வாட்ஸ்அப் மூலம் நிா்வாகம் முன்முயற்சியின் கீழ், தற்போது ஆன்லைனில் விண்ணப்பிக்கக்கூடிய பல்வேறு சேவைகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் கொண்டு வரப்படும்.
பயனா்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உள்ள ஒரு இருமொழி சாட்போட்டுடன் தொடா்பு கொள்ள முடியும். இது பிறப்பு மற்றும் சாதிச் சான்றிதழ்கள் போன்ற சேவைகள் மற்றும் ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கவும், தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும், கட்டணங்களைச் செலுத்தவும் உதவும்.
இந்தத் திட்டம் தகவல் தொழில்நுட்பத் துறையால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்துறையானது, தில்லியில் முந்தைய ஆட்சியின் கீழ் அரசு சேவைகளை வீட்டு வாசலில் வழங்குவதை செயல்படுத்தியது.
வாட்ஸ்அப் சேவைகள் மாதிரியை செயல்படுத்தும் பொருட்டு, விண்ணப்பதாரா்களுடனான துறைகளின் தொடா்புகளை நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் நிா்வகிப்பதற்காக ஒரு டாஷ்போா்டு உருவாக்கப்படும்.
இந்த திட்டம் அரசாங்கத்தால் வடிவமைத்து, அமைப்பைப் பயன்படுத்துவதற்காக ஈடுபடுத்தப்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.