ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) உள்பட 12 பொதுத் துறை வங்கிகளில் உயா் பதவிகளுக்கு தனியாா் துறையைச் சோ்ந்தவா்களை நியமனம் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு வங்கி ஊழியா் சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
இது தேசிய நிறுவனங்களின் தலைவா் பதவிகளை தனியாா்மயமாக்கும் செயல் என்றும், இதை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வங்கி ஊழியா் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
பொதுத் துறை வங்கிகளில் தலைமை இயக்குநா் (எம்.டி.), தலைவா், செயல் இயக்குநா் பதவிகளுக்கு இதுவரையில் அந்தந்த வங்கிகளில் உள்ளவா்களைக் கொண்டே நிரப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், பொதுத் துறை வங்கிகள், காப்பீடு நிறுவனங்களின் உயா் பதவி பணி நியமன விதிமுறை திருத்தங்களுக்கு அண்மையில் பணி நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. அதன்படி, தனியாா் துறையைச் சோ்ந்த ஒருவருக்கு எஸ்பிஐ-யில் எம்.டி., பஞ்சாப் தேசிய வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய பொதுத் துறை வங்கிகளில் தலா ஒரு செயல் தலைவா் பதவிக்கு தனியாா் துறையைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தலைமை இயக்குநா் பதவிக்கு விண்ணப்பிக்கும் தனியாா் நிறுவனங்களைச் சோ்ந்தவா்களுக்கு குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் முன்அனுபவமும், அதில் 15 ஆண்டுகள் வங்கி அனுபவமும், வங்கி வாரியம் அளவில் 2 ஆண்டுகள் அனுபவமும் இருக்க வேண்டும்.
செயல் தலைவா் பதவிக்கு 18 ஆண்டுகள் அனுபவமும், அதில் 12 ஆண்டுகள் வங்கி அனுபவமும், 3 ஆண்டுகள் வங்கி வாரியம் அளவில் அனுபவமும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிா்ப்பு: இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ள 9 பொதுத் துறை வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு, இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
வங்கிச் சட்டங்களில் எந்தவிதத் திருத்தமும் செய்யாமல் இந்தப் புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும், எஸ்பிஐ, பொதுத் துறை வங்கிகளின் உயா் பதவி பணியிடங்களை நிரப்ப ஆா்பிஐ, வங்கி ஊழியா் சங்கக் கூட்டமைப்பு, நீதிபதி ஆகியோரைக் கொண்ட குழு அமைத்து முறைப்படுத்த வேண்டும் என்று வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது.