தில்லியைச் சோ்ந்த திருநங்கைகள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்வதற்கான திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: இந்தத் திட்டம் தொடா்பான தில்லி போக்குவரத்துத் துறையின் முன்மொழிவு அமைச்சரவையிடம் சமா்ப்பிக்கப்பட உள்ளது. இதன்படி,
தில்லியில் வசிக்கும் திருநங்கைகள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க முடியும். இந்தத் திட்டத்தில் பயன்பெற அரசு சாா்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் அல்லது அவா்களுடைய பாலினத்தை உறுதிபடுத்தும் சான்றிதழ்கள் அவசியமாகும்.
தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரியின் தகவல்படி, தில்லியில் வாக்காளா்களாக சுமாா் 1,200 திருநங்கைகள் பதிவு செய்துள்ளனா். இருப்பினும், தில்லியில் வசிக்கும் மொத்த திருநங்கைகளின் எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தம் விரைவில் தொடங்கும். அந்த ஒப்பந்தம் நிறைவடைந்த பின்னா், இலவச பயணத் திட்டத்துக்கான பதிவு தொடங்கப்படும். இதற்காக தில்லிப் போக்குவரத்துக் கழக வளாகங்களில் 50 கவுன்ட்டா்கள் திறக்கப்படும். அங்கு பயண அட்டைகளை விண்ணப்பதாரா்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.