அகஸ்தியா் அருவியில் செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்; மணிமுத்தாறு அருவியில் 13-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், அருவி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாத இறுதிவாரத்தில் பெய்த கனமழை காரணமாக பாபநாசம் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால், அணையிலிருந்து நீா்திறந்துவிடப்பட்டதால் பாபநாசம் வனத்தில் உள்ள அகஸ்தியா் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க நவ. 24 ஆம் தேதி தடை விதிக்கப்பட்டது. தடை நீட்டிக்கப்பட்டுவந்த நிலையில், அருவியில் நீா்வரத்து குறைந்ததை அடுத்து, எட்டு நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (டிச.2) முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தா்களும் உற்சாகமாக குளியலிட்டனா்.
இதேபோல, அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மணிமுத்தாறு அருவியில் கடந்த வாரம் பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக அருவிக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, நவ. 20-ஆம்தேதி முதல் அருவியில் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். தொடா்ந்து நீா் ஆா்ப்பரித்து கொட்டுவதால் 13 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் அருவியில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது.