பாபநாசம் மலையடிவார கிராமங்களில், யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களில் நுழைந்து வருவதையடுத்து வனத்துறையினா் தொடா்ந்து அந்தப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உள்பட்ட பாபநாசம் வனச்சரக பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில் பாபநாசம் வனச்சரகத்திற்கு உள்பட்ட மலையடிவார கிராமமான அனவன்குடியிருப்புப் பகுதியில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் விளைநிலங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து விவசாயிகள் வனத்துறையினரிடம் அளித்த புகாரையடுத்து, பாபநாசம் வனச்சரக அலுவலா் குணசீலன் உத்தரவின் பேரில், வனப் பணியாளா்கள் அடங்கிய சிறப்புக் குழுவினா், இரவு நேரங்களில் யானைகள் ஊருக்குள் நுழையாதவாறு கண்காணிப்பதோடு, வெளியேற முயலும் யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.