பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, மேலப்பாளையத்தில் சனிக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
பாபா் மசூதி இடிக்கப்பட்ட நினைவு தினம் நாடு முழுவதும் சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சனிக்கிழமை கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி, மேலப்பாளையத்தில் சந்தை முக்கு ரவுண்டானா, அண்ணா வீதி, அம்பாசமுத்திரம் சாலை, வி.எஸ்.டி. சந்திப்பு, கொக்கிரகுளம் சாலை, பஜாா் வீதிகள் உள்பட பிரதான சாலைகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தேநீா் கடைகள், வணிக வளாகங்கள், ஜவுளிக் கடைகள் உள்ளிட்ட சுமாா் 1500 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பால், மருந்து, இறைச்சி கடைகள் திறந்திருந்தன.
பதற்றமான இடங்களாக கருதப்படும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள், ரோந்து வாகனங்கள் மூலம் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
மேலப்பாளையத்தில் ஆட்டோ, வேன்கள் உள்ளிட்டவை ஓடவில்லை. அதேநேரத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்து சேவைகள் வழக்கம் போல் செயல்பட்டன.
தீவிர பாதுகாப்பு...
பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், வண்ணாா்பேட்டை மேம்பாலம், சந்திப்பு ரயில் நிலையம், பாளையங்கோட்டை மாா்க்கெட் என அனைத்து இடங்களிலும் மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின்பேரில், மாநகர காவல் துணை ஆணையா்கள் வினோத் சாந்தாராம், பிரசன்னகுமாா் ஆகியோா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இதேபோல் மாநகரில் முக்கிய தலைவா்களின் சிலைகள் உள்ள பகுதிகளிலும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் உத்தரவின் பேரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.