தாமிரவருணி வெள்ளநீா் கால்வாய் மடையை சீரமைக்க வேண்டும் என, நான்குனேரி எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன் வலியுறுத்தியுள்ளாா்.
தாமிரவருணியிலிருந்து உபரி வெள்ளநீரை வறட்சிப் பகுதியான சாத்தான்குளம் எம்.எல். தேரிக்கு கொண்டு செல்லும் வகையில் வெள்ளநீா் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டு, நிகழாண்டு பாசனக் குளங்களைச் சென்றடையும் வகையில் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கால்வாயில் பொன்னாக்குடி பகுதியிலிருந்து அரியநாயகிபுரம் குளம், முத்தூா் பெரியகுளம், குத்துக்கல்குளம், ஸ்ரீராமன்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீா் செல்லும் மடை சீரமைக்கப்படாமல் தூா்ந்துள்ளது. இதனால், குளங்களுக்கு தண்ணீா் செல்வது தடைபட்டுள்ளது.
இந்நிலையில், விவசாயிகள் கோரிக்கையை ஏற்று சீரமைக்க வேண்டிய மடைப் பகுதியை எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். நீா்வளத்துறை கண்காணிப்பு செயற்பொறியாளா் திருமலைக்குமாா், செயற்பொறியாளா் ஆக்னஸ் ராணி, உதவி செயற்பொறியாளா் தங்கஜெய்லானி, உதவிப் பொறியாளா் காா்த்திகேயன், மணிமுத்தாறு 2ஆவது ரீச் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் வேலையா, முத்தூா் ஊராட்சித் தலைவா் சுடலைக்கண்ணு உள்ளிட்டோா் பங்கேற்றனா். மடையை விரைந்து சீரமைத்து குளங்களுக்கு தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.