கடலில் தத்தளித்த குளச்சல் மீனவர்கள் கரைதிரும்பினர்
மீன்பிடி வள்ளம் பழுதானதால், நடுக்கடலில் தத்தளித்த குளச்சல் மீனவர்களை தூத்தூர் மீனவர்கள் காப்பாற்றிக் கரைசேர்த்தனர்.
மீன்பிடி வள்ளம் பழுதானதால், நடுக்கடலில் தத்தளித்த குளச்சல் மீனவர்களை தூத்தூர் மீனவர்கள் காப்பாற்றிக் கரைசேர்த்தனர்.
குளச்சல் துறைமுகத் தெருவைச் சேர்ந்தவர் ஆல்பிரட் (40). இவருக்குச் சொந்தமான வள்ளத்தில் ஆல்பிரட்டும், அதே பகுதியைச் சேர்ந்த மரியநாயகம் (60), அவரது மகன் பெபியான்ஸ் (33) ஆகியோரும் வெள்ளிக்கிழமை மாலை மீன்பிடிக்கச் சென்றனர்.
சனிக்கிழமை காலையில் இவர்கள் சுமார் 18 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துவிட்டு கரைதிரும்பியபோது வள்ளத்தில் உள்ள என்ஜின் திடீரென பழுதானதாம். மேலும் காற்று பலமாக வீசியதால் இவர்களால் கரைதிரும்ப முடியவில்லை. இதையடுத்து ஆல்பிரட் தனது தம்பி ஜானுக்கு தகவல் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து கடலோரக் காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவினர்கள் தனியாக விசைப்படகில் கடலுக்குச் சென்று மீனவர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அருகே சென்று கொண்டிருந்த தூத்தூர் மீனவர்களுக்கு சைகை மூலம் தகவல் தெரிவித்து காப்பாற்ற கேட்டுக்கொண்டனர். தூத்தூர் மீனவர்கள் பழுதான வள்ளத்தை தங்கள் விசைப்படகில் கட்டி மீனவர்களைக் காப்பாற்றி கரைசேர்த்தனர்.