ரத்த தானம் செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றார் ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா.சவாண்.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு-கட்டுப்பாட்டு அலுவலகத்தின் சார்பில், நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரத்த கொடையாளர் தின விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, தலைமை வகித்து ஆட்சியர், ரத்த தான விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்துப் பேசியது: ரத்த தானம் செய்தல் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களைக் காப்பாற்ற பேருதவியாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் சார்பில் ரத்த தானம் முகாம்கள் நடத்தப்பட்டு ரத்தம் சேமிக்கப்படுகிறது. ரத்த தானம் செய்வோருக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, ரத்த தானம் செய்து, மனித உயிரை காப்பாற்றுவதற்காக மக்கள் தாமாக முன்வர வேண்டும் என்றார் அவர்.
பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்டு டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வழியாக எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியில், ஜெயசேகரன் செவிலியர் பயிற்சிக் கல்லூரி, கேத்ரின் பூத் செவிலியர் பயிற்சிக் கல்லூரி, மாடரேட்டர் ஞானதேசன் தொழிற்பயிற்சிக் கல்லூரி, மாவட்ட ஆசிரியர் கல்வி- பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் மாணவர், மாணவிகள், நம்பிக்கை மையம், சுகவாழ்வு மையம், ரத்த வங்கி, தொண்டு நிறுவனம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு- கட்டுப்பாட்டு அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து, 54 முறை ரத்த தானம் செய்த கிருஷ்ணதாஸ், 2016ஆம் ஆண்டு தொடர்ந்து 3 முறை ரத்த தானம் செய்த அய்யப்பன், சிவகுமார் ஆகிய 3 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் வசந்தி, ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு- கட்டுப்பாட்டு அலுவலகத்தின் திட்ட மேலாளர் ஸ்டெல்லா ஜெனட், அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் கரோலின் கீதா உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.