தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரமற்று காணப்படும் கழிப்பறைகளும், இடிந்து விழும் நிலையில் உள்ள கலையரங்கமும் புனரமைக்கப்படுமா என மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.
தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்வழி கல்வியும், ஆங்கிலவழி கல்வியும் பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பள்ளியில் சுமார் 720-க்கும் மேற்பட்ட மாணவர்- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் போதுமான அளவுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை எனவும், இருக்கிற 2 கழிப்பறைகளும் சுகாதாரமற்ற நிலையிலும் உள்ளன. இதனால், மாணவர்- மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.
குமரி மாவட்டத்தில் டெங்கு உள்ளிட்ட நோய் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் முன் இதுபோன்ற சுகாதாரமற்ற கழிப்பறைகளை புனரமைக்க வேண்டியது கட்டாயமாகும். இதுதவிர, பள்ளியின் கலையரங்க கட்டடச் சுவர் பலமிழந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. வகுப்பறை அருகே இந்த கலையரங்கமும், அதையடுத்து சிறிய அறையும் உள்ளன. இந்த அறையின் பக்கச் சுவரும் கீறல் விழுந்து எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. கலையரங்கம் அருகே மாணவர்- மாணவிகள் அடிக்கடி செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளதால், விபரீதம் நிகழும் முன் கலையரங்கத்தை சீரமைக்க வேண்டும்; கழிப்பறைகளை புனரமைத்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.