நாகர்கோவிலில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கநகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் லியோ மனைவி மேரிரோசிகா (37). இவர், அப்பகுதியில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். திங்கள்கிழமை காலையில் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு மேரிரோசிகா நடந்து சென்று கொண்டிருந்தாராம்.
அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் மேரிரோசிகா அணிந்திருந்த 10 பவுன் தங்கசங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது, மேரிரோசிகா அவர்களிடம் இருந்து நகையை மீட்க போராடினாராம். எனினும், மேரிரோசிகாவின் கையில் சங்கிலியின் டாலர் மட்டும்தான் கிடைத்தது. 9 பவுன் எடையுள்ள தங்கசங்கிலியுடன் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
புகாரின்பேரில், நேசமணி நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தங்கசங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.