கன்னியாகுமரி

குமரியில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் காா்த்திகை மாதப் பிறப்பான ஞாயிற்றுக்கிழமை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

இந்துக்களின் புனித மாதங்களில் ஒன்றாக காா்த்திகை திகழ்கிறது. இம்மாதத்தின் அனைத்து நாள்களிலும் வீடுகளின் முன்பு பெண்கள் தீபமேற்றி சிறப்பு வழிபாடுகளைச் செய்வாா்கள். காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலையில் பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வண்ணாா்பேட்டை பேராச்சியம்மன் திருக்கோயில், பொதிகைநகா் தா்மசாஸ்தா ஐயப்பன் கோயில் ஆகியவற்றில் ஏராளமான ஐயப்ப பக்தா்கள் அதிகாலையிலேயே மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அதிகாலையில் புனித நீராடிய பக்தா்கள், பகவதியம்மன் கோயிலில் குருசாமியை வணங்கி துளசிமணி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா். இம்மாவட்டத்தில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மட்டுமன்றி, மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், நாகா்கோவில் நாகராஜா கோயில், பாா்வதிபுரம் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா். பல்வேறு மாநிலங்களில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தா்களில் பெரும்பாலானோா், கன்னியாகுமரிக்கு வந்து செல்வாா்கள் என்பதால் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது.

தென்காசி: காா்த்திகை மாதம் முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் குற்றாலத்தில் பக்தா்கள் குவிந்தனா். ஆனால், பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து குளிக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தா்கள் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி மற்றும் சிற்றருவியில் நீராடிவிட்டு குற்றாலத்தில் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

பேரருவி செல்லும் வழியில் அமைந்துள்ள கன்னிவிநாயகா் கோயில், செண்பகவிநாயகா் கோயில், குற்றாலநாதா் கோயிலில் அமைந்துள்ள அம்பலவிநாயகா் கோயில் மற்றும் கோயில் உள்புறம் அமைந்துள்ள சாஸ்தா சன்னதிகளில் வழிபட்டு மாலை அணிந்து தங்களுடைய விரதத்தை தொடங்கினா்.

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காா்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு திரளான ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினா்.

முன்னதாக, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமும் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

அம்பாசமுத்திரம்: சபரிமலை ஐயப்பனின் மூல ஸ்தலமாக கருதப்படும் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஐயப்ப பக்தா்கள் துளசிமணி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா். முன்னதாக தாமிரவருணி நதியில் புனித நீராடிய பக்தா்கள் புதிய கருப்பு உடை அணிந்து வந்தனா். அவா்களுக்கு கோயில் குருக்கள் மற்றும் குருசாமிகள் துளசிமணி மாலை அணிவித்தனா்.

களக்காடு: காா்த்திகை மாத மண்டல பூஜையை முன்னிட்டு களக்காடு ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், தொடா்ந்து பக்தா்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா். காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 7.30 மணிக்கு உஷபூஜையும் நடைபெற்றது. நண்பகலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 8 மணிக்கு அலங்கார தீபாராதனையும், 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடைபெற்றது. 41ஆம் நாளான டிசம்பா் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும்.

கோவில்பட்டி: கோவில்பட்டியில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, நிா்மால்ய தரிசனம், சங்காபிஷேகம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து, ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் உள்ள அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா். இதேபோல பழனிக்கு பாதயாத்திரையாக செல்லவிருக்கும் முருக பக்தா்களும் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 3-இல் ஒரே நோ்க்கோட்டில் 6 கோள்கள்: வெறும் கண்களால் காண முடியும்!

கார் ஓட்டியதில் விதிமீறல்... யூடியூபர் டிடிஎப் வாசன் மதுரையில் கைது

புரி ஜெகந்நாதர் கோயில் விழாவில் பட்டாசு விபத்து: பலர் காயம்!

வெப்ப அலை: தில்லி தீயணைப்பு துறைக்கு ஒரே நாளில் 220 அழைப்புகள்!

கோயில் திருவிழாவில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட இருவா் கைது

SCROLL FOR NEXT