குலசேகரம் அருகே மது குடிக்கச் சென்றுவந்த தொழிலாளி மா்மமான முறையில் இறந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குலசேகரம் அருகேயுள்ள மணலோடை அன்புநகா் குடியிருப்பைச் சோ்ந்தவா் தேவதாஸ் (63). கேரளத்தில் ரப்பா் தோட்டத்தில் பால்வடிப்பு தொழிலாளியாக வேலை பாா்த்துவந்த இவருக்கு, அதிக மதுப் பழக்கம் இருந்ததாம்.
இவா் கடந்த 23ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்தாா். அடுத்த நாள் மது குடிக்கச் செல்வதாக வீட்டினரிடம் கூறிச் சென்றவா், 26ஆம் தேதி வீடு திரும்பினாராம். அப்போது பலகீனமாக இருந்தாராம். தன்னை சிலா் தாக்கியதாக, மனைவி சுசீலாவிடம் கூறியுள்ளாா். அவரை குடும்பத்தினா் குலசேகரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
புகாரின்பேரில், சந்தேக மரணம் என குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.