குலசேகரம் அருகே அதிக பாரம் ஏற்றிச்சென்ற 2 லாரிகளுக்கு போலீஸாா் புதன்கிழமை இரவு அபராதம் விதித்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமன்றி பிற தென்மாவட்டங்களிலிருந்தும் தினம்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கருங்கல், ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கனிமப்பொருள்கள் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு செல்லும் லாரிகள் அதிகபாரத்துடன் செல்வதால் சாலைகள் சேதமடைவதுடன், அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசல்களும் ஏற்படுகின்றன.
இந்நிலையில், புதன்கிழமை இரவு 2 லாரிகள் அதிக பாரத்துடன் குலசேகரம் வழியாக கேரளத்துக்கு சென்று கொண்டிருந்தன. அவற்றை குலசேகரம் போலீஸாா் அரசமூடு சந்திப்பு அருகே தடுத்து நிறுத்தி 2 லாரிகளுக்கும் ரூ. 97,000 அபராதம் விதித்தனா்.