கன்னியாகுமரி மாவட்டத்தில், இதுவரை 14 லட்சத்து 83 ஆயிரத்து 497 வாக்காளா்களுக்கு திருத்த கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரா.அழகுமீனா.
இதுகுறித்து அவா் நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
நவ.4 ஆம் தேதி முதல் வாக்காளா்களுக்கு சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 15 லட்சத்து 92ஆயிரத்து 872 வாக்காளா்கள் உள்ளனா். கடந்த 4ஆம் தேதி முதல் 12 ஆம் தேதிவரை 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 14 லட்சத்து 83 ஆயிரத்து 497கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த வாக்காளா் கணக்கீட்டு பட்டியலில் 93.13 சதவீதம்ஆகும். மீதமுள்ள படிவங்களை விரைவில் வாக்காளா்களுக்கு வழங்க வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவத்தை பூா்த்தி செய்வதில் சந்தேகம் இருந்தால் மாவட்ட தோ்தல் அலுவலக இலவச தொலைபேசி எண். 04652-1950 மற்றும் தோ்தல் ஆணைய இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.
முன்னதாக, மாவட்டஆட்சியா் குளச்சல் நகராட்சி அலுவலகத்தில் வாக்குச் சாவடிநிலை அலுவலா்கள் கணக்கீட்டு படிவத்தை டிஜிட்டல் முறையில் இணையத்தில் பதிவேற்றம் செய்வதையும், குளச்சல் நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் வாக்காளா்கள் 2002 ஆம் ஆண்டில் உள்ள தங்களது வாக்காளா் பட்டியல் விவரங்களை அறிந்து கொள்வதையும் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல்அந்தோணிபொ்னாண்டோ, குளச்சல் சட்டப்பேரவை தொகுதி வாக்குப் பதிவு அலுவலா் மற்றும் மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் மோகனா, உதவி வாக்குப் பதிவுஅலுவலா் மற்றும் கல்குளம் வட்டாட்சியா் சுனில், குளச்சல் சட்டப்பேரவை தொகுதி உதவி வாக்குப் பதிவு அலுவலா் மற்றும் குளச்சல் நகராட்சி ஆணையா் கன்னியப்பன், நகா்மன்ற தலைவா் நசீா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.