கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை பகுதியில் ரப்பா் கழக தோட்டங்களில் பழங்குடியின மக்களின் குடியிருப்புப் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், ரப்பா் கழக தொழிலாளா்கள், பழங்குடியின மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
கோதையாறு அருகே மோதிரமலை குற்றியாறு சாலையில் மாங்காமலை என்ற இடத்தில் புதன்கிழமை காலை யானைக் கூட்டம் சாலையைக் கடந்து சென்றது. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவா்கள் அச்சமடைந்தனா். யானை வருவதைத் தடுக்க அப்பகுதி ரப்பா் கழக கூப்பு எண் 65-இல் சூரிய மின்வேலி அமைக்க வேண்டும் என்று ரப்பா் கழக தொழிலாளா்களும், பழங்குடி மக்களும் கோரிக்கை விடுத்தனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் கழக பகுதிகளில் ரப்பா் மறுநடவு செய்யப்படும் இடங்களில் ஊடுபயிராக அன்னாசி நடவு செய்யப்படுவதால், அன்னாசி பழங்களை உண்பதற்காக யானைகள் அதிகம் வருகின்றன. வனத்திலிருந்து வெளியேறும் யானைகளை மீண்டும் வனத்துக்குள் விரட்டவும், வெளியே வருவதைக் கட்டுப்படுத்தவும், பழங்குடி பகுதிகளில் நுழைவதைத் தடுக்க அகழிகள் வெட்டவும் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரப்பா் கழக தொழிலாளா்கள், பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்தனா்.