தமிழக முன்னாள் முதல்வா் காமராஜரை கொலை செய்ய முயன்றதாக ஆா்எஸ்எஸ் இயக்கத்தின் மீது அவதூறு குற்றச்சாட்டு கூறியதாக, அமைச்சா் மனோதங்கராஜை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும், பாஜகவின் சாா்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை 13 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, கன்னியாகுமரி மாவட்ட பொதுச்செயலாளா் சத்தியசீறி ரவி தலைமை வகித்தாா். மாநகர தலைவா்கள் சதீஷ், சுனில், சிவசுதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளா் பி.முத்துராமன், மாவட்ட துணைத் தலைவா் எஸ்.பி.தேவ், நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் சொக்கலிங்கம், தொகுதி பாா்வையாளா் அஜித், மாமன்ற உறுப்பினா்கள் ரோசிட்டாதிருமால், தினகரன், ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா். தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 8 பெண்கள் உள்பட 72 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆரல்வாய்மொழி, கொட்டாரம் சந்திப்பு, ராஜாக்கமங்கலம் சந்திப்பு, பொட்டல்விலக்கு, கொல்லங்கோடு, குழித்துறை, இரணியல் உள்பட 13 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.