நாகா்கோவில் கோட்டாறில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூலை 15ஆம் தேதி முதல் அக். 8ஆம் தேதி வரை 270 முகாம்கள் நடத்தப்பட்டு, 1 லட்சத்து 35 ஆயிரத்து 41 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. முகாம்களில் பொதுமக்கள் அளித்த சொத்துவரி பெயா் மாற்றம், பிறப்புச் சான்றிதழ், மின் கட்டண பெயா் மாற்றம், புதிய மின் இணைப்பு, குடிநீா் இணைப்பு, வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், தொழிலாளா் நல வாரிய அட்டைகள், குடும்ப அட்டைகளில் பெயா், முகவரி மாற்றம், ஆதாா் பெயா் மாற்றம், கடனுதவிகள், பட்டா பெயா் மாற்றம் உள்ளிட்ட 9 ஆயிரத்து 277 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டு, அதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன.
முகாமுக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திடவும், பெறப்படும் மனுக்களை இணையத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யவும் முகாம் ஒருங்கிணைப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகா் நகா்நல அலுவலா் மருத்துவா் ஆல்பா் மதியரசு, மாநகராட்சி மண்டலத் தலைவா் அகஸ்டினா கோகிலாவாணி, துறை அலுவலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.