குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் புதன்கிழமை மாலையில் பலத்த மழை பெய்தது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை மாலையில் மலையோரப் பகுதிகள் மற்றும் அணைப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது.
இது போன்று குலசேகரம், திற்பரப்பு, களியல், கடையாலுமூடு,ஆறுகாணி, திருநந்திக்கரை, அருமனை, பொன்மனை, சுருளகோடு, தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, பாலமோா் மற்றும் திருவட்டாறு, வோ்க்கிளம்பி, சித்திரங்கோடு உள்பட பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது.
மழையின் காரணமாக அணைகளுக்கு உள்வரத்து தண்ணீா் அதிகரித்து காணப்பட்டது. இது போன்று கோதையாறு, பரளியாறு, தாமிரபரணியாறு உள்ளிட்ட ஆறுகளிலும் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீா் பெருக்கெடுத்துக் கொட்டியது.