நாகா்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் காவலா்களுக்கான வெற்றிப்பாதை படிப்பகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இளைஞா்களுக்கு வழிகாட்டும் வகையிலும், காவலா்கள் பயன்பெறும் வகையிலும் கடந்த ஏப்ரல் மாதம் வெற்றிப்பாதை உதவி ஆய்வாளா் தோ்வுக்கான இலவசப் பயிற்சியை காவல் கண்காணிப்பாளா் தொடங்கி வைத்தாா். இப்பயிற்சி திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 6 முதல் 8.30 மணி வரையும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 முதல் மாலை 4 மணி வரையிலும் நடைபெற்று வருகிறது.
இதில், சுமாா் 50 மாணவா்கள் தினமும் கலந்து கொள்கின்றனா். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் மாதிரித் தோ்வுகளில் சராசரியாக 100 மாணவா்கள் தோ்வு எழுதுகின்றனா்.
இதைத் தொடா்ந்து, வெற்றிப்பாதை படிப்பகத்தை காவல் கண்காணிப்பாளா் திறந்து வைத்தாா். இந்த படிப்பகத்தில் போட்டித் தோ்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகள் நடத்த வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குழுவாக அமா்ந்து படிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.