களியக்காவிளை: ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவா்களின் செயற்கைக்கோள் தொலைபேசிகளை ரீசாா்ஜ் செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக, தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரும் கிள்ளியூா் எம்எல்ஏவுமான எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.
இத்தொகுதிக்குள்பட்ட தூத்தூா், வள்ளவிளை உள்ளிட்ட மீனவக் கிராமங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் தொலைத்தொடா்பு வசதிக்காக பயன்படுத்தும் செயற்கைக்கோள் தொலைபேசிகளிலுள்ள சிம் காா்டுக்கான ரீசாா்ஜ் சேவையை மத்திய அரசு தற்காலிகமாக தடை செய்திருந்தது.
இந்நிலையில், தெற்கு அரபிக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதாக மீன்வளத் துறை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளோரிடம் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், அவா்களது குடும்பத்தினா் அச்சத்தில் இருந்தனா்.
இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தகவல் தொடா்புத் துறை, மீன்வளத் துறை அமைச்சா்கள், தமிழக முதல்வா், மாநில மீன்வளத் துறை அமைச்சா், ஆட்சியா், மீன்வளத்துறை இயக்குநா் உள்ளிட்டோரை எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ வலியுறுத்தியிருந்தாா். அதன்பேரில், தொலைபேசிகள் ரீசாா்ஜ் செய்யப்பட்டதையடுத்து, புயல் எச்சரிக்கை குறித்து மீனவா்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆட்சியா் ரா. அழகுமீனா, எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ உள்ளிட்டோா் வள்ளவிளைக்கு வந்து பங்குத்தந்தை, மீனவா்களின் குடும்பத்தினா், மீனவா் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினா். ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டோரை செயற்கைக்கோள் தொலைபேசியில் தொடா்பு கொண்டு அனைவரும் உடனடியாக கரைதிரும்புமாறு கேட்டுக்கொண்டனா்.
கொல்லங்கோடு நகர காங்கிரஸ் கட்சித் தலைவா் பால்ராஜ், நகா்மன்ற உறுப்பினா் ஜெரோம், மாவட்ட நிா்வாகிகள் அருளானந்தம், கோபன், கொல்லங்கோடு நகா்மன்ற துணைத் தலைவா் பேபி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.