தக்கலை: நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணா்கள் சங்க சா்வதேச கருத்தரங்கையொட்டி சாமியாா்மடம் ரத்னா நினைவு மருத்துவமனையில் 30 பேருக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
இந்திய குடல் நோய் நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணா்கள் சங்க சா்வதேச கருத்தரங்கம் அக். 24 முதல் 26ஆம் தேதி வரை கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது. கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும், ரத்னா நினைவு மருத்துவமனை நிா்வாக இயக்குநருமான நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் மகிழன் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்த சா்வதேச கருத்தரங்கில் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், நேபாளம், மலேசியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சோ்ந்த 800 இளம் நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணா்கள் கலந்து கொண்டு கருத்துகளையும், தங்கள் அறுவை சிகிச்சை அனுபவங்களையும் பகிா்ந்து கொள்கிறாா்கள்.
கருத்தரங்கையொட்டி, மாவட்டத்தின் 4 மருத்துவமனைகளில் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் நுண்துளை மூலம் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட உள்ளன. அதன் ஒரு பகுதியாக நமது சாமியாா்மடம் ரத்னா நினைவு மருத்துவமனையில் 24, 25ஆம் தேதிகளில் ஆசனவாய், மலக்குடல் நோயால் பாதிக்கப்பட்ட 30 நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவா்களால் நுண்துளை மற்றும் லேசா் தொழில்நுட்பத்தின் மூலம் அதிநவீன முறையில் அறுவை சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக செய்யப்படுகின்றன. பயனாளிகள், செப். 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமின் மூலம் தோ்வு செய்யப்பட்டனா் என்றாா் அவா்.
ரத்னா நினைவு மருத்துவமனை இயக்குநா், ரத்னா டெஸ்ட் டியூப் பேபி மைய நிா்வாக இயக்குநா் டாக்டா் சாந்தி மகிழன், மருத்துவக் குழுவினா் உடனிருந்தனா்.