நாகா்கோவில்: நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சாா்பில், மாா்பக புற்று நோய் விழிப்புணா்வு நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தொடங்கிய நடைப்பயணத்தை, பூதப்பாண்டி அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலா் கிறிஸ்டபெல் பியூலா, நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மகளிா் மருத்துவத் துறை தலைவா் மினிகுருப் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். பயணத்தில் கலந்து கொண்டவா்கள், மாா்பகப் புற்று நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், நோய் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பு மற்றும் நோய்த் தடுப்பு சிகிச்சை குறித்து விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா். வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நடைப்பயணம் நிறைவடைந்தது.
பின்னா் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சிக்கு, மணவாளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் ஜெயலெட்சுமி தலைமை வகித்தாா். கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையின் புற்று நோய் சிகிச்சை நிபுணா் குமணன், புற்று நோய் குறித்து விழிப்புணா்வு உரை நிகழ்த்தினாா். மருத்துவா் லாலாஜிஆனந்தராபின், மாா்பக புற்று நோயியல் பரிசோதனை குறித்தும், மருத்துவா் பெலிக்ஸ் காா்டிலா, மாா்பக மறுசீரமைப்பு விருப்பங்கள் குறித்தும் பேசினா். கிம்ஸ் ஹெல்த் நோயியல் துறை நிபுணா் பினிட்டா நன்றி கூறினாா்.