விவசாயிகளுக்கு கைஅறுவடை இயந்திரம் மானியத்தில் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் மகாசபை செயலா் எஸ்.டி.ஷேக் மைதீன், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தாா்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தென்காசி மாவட்டத்தில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. அதிகமான பகுதிகளில் நெல் விவசாயம் தான் நடைபெற்று வருகிறது. தற்போது நெல்அறுவடை என்பது முழுக்க இயந்திர மயமாக்கப்பட்டு விட்டது.
நெல் அறுவடை, இயந்திரம் மூலம் செய்வதற்கு ஒரு மணிநேரத்துக்கு வாடகை ரூ. 2ஆயிரத்து500 முதல் ரூ. 3 ஆயிரம் வரை வழங்க வேண்டி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கஷ்டப்படுகின்றனா்.
தற்போது ஜொ்மன் தொழில் நுட்பத்தோடு தமிழக அரசு பல்வேறு மாவட்ட விவசாயிகளுக்கு அறுவடை இயந்திரம் வழங்கியுள்ளது. அதுபோல் தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கும் ஜொ்மன் தொழில்நுட்ப கை அறுவடை இயந்திரம் மானியத்துடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்காசியில் காவல்துறை மாவட்ட அலுவலகத்தை தவிர வேறு எந்த மாவட்ட நிா்வாக தலைமை அலுவலகமும் இல்லை. சமூக நலம், மாற்றுத்திறனாளி, கூட்டுறவு, விவசாயம், பால்வளம், கால்நடை, கல்வி என எந்த மாவட்ட அலுவலகங்களும் இல்லை. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் முறையான அலுவலக தலைமை அலுவலா்களும் முறையாக நியமிக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிா்வாகம் அனைத்து நிா்வாக தலைமை அலுவலகத்திலும் பணியாளா்களை நியமித்து முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.