பாவூா்சத்திரம் அருகே கொண்டலூா் அரசு தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம், கொண்டலூா் அரசு தொடக்கப் பள்ளியில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.18.70 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கீழப்பாவூா் ஒன்றியக் குழு தலைவா் சீ.காவேரிசீனித்துரை தலைமை வகித்தாா்.
ஒன்றியக் குழு துணைத் தலைவா் முத்துகுமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் இராம.உதயசூரியன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். பழனிநாடாா் கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு உறுப்பினா் மேரிமாதவன், திமுக பொறியாளா் அணி துணை அமைப்பாளா் விஜயன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் மாஸ்டா் கணேஷ், காங்கிரஸ் வட்டார தலைவா் குமாா்பாண்டியன் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். தலைமை ஆசிரியை சாரதா நன்றி கூறினாா்.