கோடை விடுமுறை முடிந்து திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.
தமிழகத்தில் 2016-17 ஆம் கல்வியாண்டின் இறுதித் தேர்வுகள் முடிந்து, ஏப்ரல் மாத்ததில் சில நாள்களும், மே மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடையும், கத்திரி வெயிலும் முடிந்தாலும் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டதால் பள்ளிகள் திறப்பதை ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தின் கீழ் உள்ள திருநெல்வேலி, தென்காசி, சேரன்மகாதேவி ஆகிய கல்வி மாவட்டங்களில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.
மழலையர் வகுப்பு (கே.ஜி. வகுப்புகள்) குழந்தைகள் பள்ளி வளாகம் வரை உற்சாகமாக வந்தாலும், பெற்றோரை பிரிந்து வகுப்பறைக்குள் செல்ல முடியாமல் அழத் தொடங்கியதைக் காண முடிந்தது. அவர்களை சமாதானப்படுத்தி பெற்றோர்கள் அனுப்பினர். சில குழந்தைகள் வழக்கத்துக்கு மாறாக துள்ளலுடன் சென்றதையும் காண முடிந்தது.
பள்ளிகள் திறக்கப்பட்டதால் பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரத்தில் புதன்கிழமை காலை, மாலை நேரங்களில் மீண்டும் போக்குவரத்து நெரிசலை காண முடிந்தது. எனவே பள்ளி, கல்லூரிகளுக்காக காலை 8 முதல் 9 மணி வரையும், மாலையில் 3.30 மணி முதல் மாலை 5 மணி வரையும் போக்குவரத்தில் சில மாற்றங்களை போலீஸார் ஏற்படுத்த வேண்டும்; மாணவிகளுக்கு பிரத்யேகமாக நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விடுதியுடன் கூடிய வசதி இருப்பதால் கிராமப்புறங்களைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர், மாணவிகள் விடுதிகளில் தங்கி பயிலுகின்றனர்.
புதன்கிழமை பள்ளி திறந்த நாளில் விடுதிக்கு தேவையான பொருள்களை சுமந்தபடி பள்ளிக்கு பெற்றோருடன் வந்ததை காண முடிந்தது.
1.70 லட்சம் மாணவர்களுக்கு புத்தகம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 கல்வி மாவட்டங்ளிலும் சேர்த்து சுமார் 1.70 லட்சம் மாணவர், மாணவிகளுக்கு விலையில்லா புத்தகங்கள் புதன்கிழமை முதல் வழங்கப்படுகிறது. பள்ளித் தொடங்கிய முதல் நாளே அனைத்து வகுப்புகளுக்கும் புத்தகங்களை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் புதன்கிழமை புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும், சீருடைகளும் வழங்கப்பட்டன. புதன்கிழமை புத்தகங்கள், சீருடை கிடைக்காத மாணவர்களுக்கு வியாழக்கிழமை உடனடியாக வழங்கி அவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.