திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்திலும் தினமும் ஒரு மணிநேரம் விளையாட்டுப் பயிற்சி அளிப்பது என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட அளவிலான விளையாட்டு ஆலோசனைக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இக் கூட்டத்துக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். குழுவின் துணைத் தலைவரும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளருமான அருண் சக்திகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதி சற்குணம் வரவேற்றார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி மண்டல அலுவலர் சிவகுமார், முனைவர் சேது, உடற்கல்வி ஆய்வாளர் ரமேஷ்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
பின்னர், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருநெல்வேலி மாவட்டத்தில் இளைஞர்கள், மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிதாக விளையாட்டு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். மாவட்டத்தில் உள்ள 425 ஊராட்சிகளிலும், 19 ஒன்றியங்களிலும் மாவட்ட அளவிலும், வட்டார அளவிலுமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் தினமும் ஒரு மணிநேரம் மாணவர், மாணவிகளுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்படும். பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் ஸ்குவாஷ், ஸ்கேட்டிங் ரிங் விளையாட்டுகளுக்கான கட்டுமானப் பணிகளை தொடங்குவதுடன், புதிய கட்டுமானங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அவசியம் ஏற்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக் கூட்டத்துக்கு முன்னதாக மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 29 தங்கம், 15 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை திருநெல்வேலி மாவட்ட வீரர், வீராங்கனைகள் பெற்றது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.