தூய்மை நகரங்கள் பட்டியலில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு 193ஆவது இடம் கிடைத்துள்ளது. ஆவணங்கள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுவதாலும், தாமிரவருணி கரையோரம் திறந்தவெளிக் கழிப்பறை தவிர்க்க முடியாததாக உள்ளதாலும் திருநெல்வேலி மாநகருக்கு பின்தங்கிய மதிப்பெண் கிடைத்திருப்பதாகக் கூறினாலும், சுகாதாரப் பணிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மாநகரம் இருப்பதை மறுப்பதற்கில்லை.
மத்திய அரசின் தூய்மை பாரதம் திட்டம் 2014, அக்டோபர் 2இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் தூய்மைப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தும் நகரங்களில் மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் வல்லுநர் குழு நேரில் ஆய்வுசெய்து ஆண்டுதோறும் தூய்மை நகரங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்தாண்டு 73 நகரங்களை ஆய்வு செய்து பட்டியல் வெளியிட்டது. இந்தாண்டு திருநெல்வேலி உள்பட 434 நகரங்களை ஆய்வு செய்து பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில், திருநெல்வேலி மாநகருக்கு 193ஆவது இடம் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு முன்னோடியாக திடக்கழிவு மேலாண்மை திட்டம், பிளாஸ்டிக் ஒழிப்பு, அறிவியல் ரீதியாக குப்பைகளை மூடாக்கம் செய்தல், தனிநபர் கழிப்பறைகளை ஊக்குவித்தல், குப்பைகளிலிருந்து உரம் தயாரித்தல் என பல்வேறு திட்டங்களை திருநெல்வேலி மாநகராட்சி செய்துவருகிறது. ஆனால், தூய்மை நகரங்கள் பட்டியலில் குறிப்பிட்ட இடம் கிட்டவில்லை.
மத்திய அரசின் தணிக்கையில் மதிப்பெண் குறைந்ததற்கு, மாநகரில் நிலவும் சுகதாரக் கேடும் முக்கியக் காரணியாக அமைந்துள்ளது. மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் திறந்தவெளி சாக்கடைகள் உள்ளன. இந்த சாக்கடைகளில் ஆங்காங்கே மனிதக் கழிவுகள் தேங்கி காணப்படுகின்றன. குறிப்பாக வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், மேலப்பாளையம், பாளையங்கோட்டை, தச்சநல்லூர் பகுதிகளில் குடியிருப்புகளுக்கு மத்தியில் திறந்தவெளி சாக்கடைகள் உள்ளன. பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டபோதிலும் வீதியெங்கும் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கிக் கிடப்பது மாநகராட்சிக்கு பெரிதும் சவாலாகவே உள்ளது. சாலைகளில் திரியும் கால்நடைகளைப் பிடித்து அபராதம் விதித்தல், கோசாலைகளில் ஒப்படைத்தல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், போக்குவரத்து நெரிசலுக்கு கால்நடைகள் காரணமாக இருப்பது வழக்கமாகிவிட்டது. கால்நடைகளைப் பராமரிக்க மாநகராட்சி சார்பில் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபம் அருகே அமைக்கப்பட்ட பராமரிப்பு மையமானது கட்டட இடிபாடுகள் மற்றும் செங்கல், மண் கழிவுகளை சேகரிக்கும் கூடாரமாகக் காட்சியளிக்கிறது. மாநகரச் சாலைகளில் பெரும்பாலான பகுதிகளில் இருபுறமும் தேங்கியுள்ள புழுதி மண், அதிக காற்று வீசும் நேரங்களில் மக்கள் மீது மண்ணை வாரி வீசுவதும் வாடிக்கையாகிவிட்டது. மாநகரின் பெரும்பாலான கழிவுகள் தாமிரவருணி ஆற்றில் கலக்கப்படுவதாலும் சுகாதார சீர்கேடு தவிர்க்க முடியாததாக உள்ளது. இதில், திறந்தவெளி சாக்கடை, திறந்தவெளிக் கழிப்பறை, பிளாஸ்டிக் கழிவுக் குப்பைகள் ஆகியவையே தூய்மை நகரங்கள் பட்டியலில் திருநெல்வேலியை பின்னுக்குத் தள்ளிய முக்கியக் காரணிகளாக அமைந்ததை மறுப்பதற்கில்லை.
இதுதொடர்பாக, மாநகராட்சியின் நகர் நல அலுவலர் பொற்செல்வன் கூறியது: திறந்தவெளிக் கழிப்பறைகள் தொடர்பாக, திருநெல்வேலி மாநகராட்சியானது உண்மை நிலையை அப்படியே அறிக்கையாக அளித்தது. மாநகரின் மத்தியில் தாமிரவருணி செல்லும் சூழலில் திறந்தவெளி கழிப்பறையே இல்லை என்று அறிக்கை அளிக்க முடியாது. இதனால், மத்திய அரசின் பட்டியலில் பின்தங்கியுள்ளோம். திருநெல்வேலிக்கு 193ஆவது இடம் கிடைத்திருப்பது, மாநகராட்சியின் திட்டங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாகவே கருதுகிறோம். எனினும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் திருநெல்வேலி மாநகராட்சி இதர நகரங்களுக்கு முன்னோடியாக உள்ளது பெருமைக்குரியது என்றார் அவர்.
அடுத்தாண்டு சிறப்பிடம்!
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவ. சுப்பிரமணியன் கூறியது: பிளாஸ்டிக் கழிவுகளை தனியே சேகரித்து அவற்றைப் பாதுகாப்பாக அழிப்பதில் திருநெல்வேலி மாநகராட்சி முதலிடம் வகிக்கிறது. இதுமட்டுமல்லாது பெரு நிறுவனங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்களில் சேகரமாகும் குப்பைகளை அந்தந்த நிறுவனத்தினரே சொந்த செலவில் உரமாக்கவும், பாதுகாப்பாக அழிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தாமிரவருணி கரையோரம் காணப்படும் திறந்தவெளிக் கழிப்பறை சூழலையும், வேறுசில பகுதிகளையும் பார்வையிட்ட மத்தியக் குழுவினர் அதனடிப்படையிலேயே மதிப்பெண் அளித்துள்ளனர். மாநகராட்சியின் பிற சீரிய திட்டங்களைப் பார்வையிடவில்லை. இருப்பினும், அடுத்தாண்டு தூய்மை நகரங்கள் பட்டியலில் திருநெல்வேலி மாநகராட்சி சிறப்பிடம் பெறும். அதற்கு முன்னதாக சிறந்த மாநகராட்சிக்கான விருதை மத்திய, மாநில அரசுகளிடம் பெறும் சூழல் உருவாகும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.