களக்காடு அருகே சேதமடைந்த நிலையில் உள்ள குறுகலான பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு அப்பகுதியில் விசாலமான பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு புதிய பேருந்து நிலையத்திலிருந்து பாரதிபுரம், உச்சினிமாகாளி அம்மன் கோயில் வழியாக கீழப்பத்தை செல்லும் சாலையில் சிவசண்முகபுரம் (குடில்தெரு), மடத்துத்தெரு, கொம்புக்காரன்தெரு ஆகிய குடியிருப்புப் பகுதிகள் அமைந்துள்ளன. இக்கிராமங்களுக்கு மையப் பகுதியில் விநாயகத்தான்குளம் உள்ளது. விநாயகத்தான்குளத்தின் தெற்குமடை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மிகக் குறுகலான பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பலத்த மழையால் சேதமடைந்தது.
இதனால் தற்போது தடுப்புச்சுவா் இடிந்து சேதமடைந்த நிலையில் பலமிழந்து காணப்படுகிறது. களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட மஞ்சுவிளை, காமராஜ்புரம், மேலவடகரை, கீழப்பத்தை, பண்டிதன்குறிச்சி, சிவசண்முகபுரம், மடத்துத்தெரு, கொம்புக்காரன்தெரு, சிங்கம்பத்து, இந்திராகாலனி, தம்பித்தோப்பு உள்ளிட்ட கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவியா் தங்கள் கிராமங்களிலிருந்து களக்காடு வந்து செல்ல புதிய பேருந்து நிலையத்தையொட்டியுள்ள பாரதிபுரம் வழியாக இந்த குறுகலான பாலத்தைக் கடந்தே சென்று வருகின்றனா்.
இந்த வழித்தடத்தில் சிற்றுந்து ஒன்று இயங்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் குடில்தெரு பகுதியில் உள்ள குறுகலான பாலத்தில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மட்டுமே செல்ல முடியும். வேன், டிராக்டா், சிற்றுந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாது. ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் விநாயகத்தான்குளம் நிரம்பும்போது, உபரிநீா் இந்த பாலம் அருகேயுள்ள மடை வழியாக வெளியேறும் போது, பாலம் சேதமடைந்து பலமிழந்து வருகிறது.
10.க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோா் தினமும் இந்த வழியாக சென்று வருகின்றனா். களக்காட்டிலிருந்து தம்பித்தோப்பு, கருவேலன்குளம் வழியாக கீழப்பத்தை செல்ல 7 கி.மீ தொலைவு உள்ளது. ஆனால் களக்காடு புதிய பேருந்து நிலையத்திலிருந்து குடில்தெரு பாலம் வழியாக 4 கி.மீ தொலைவில் கீழப்பத்தைக்குச் சென்றுவிடலாம். இதனால் பயணநேரமும் குறையும். போதிய சாலை வசதி இருந்தும், சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள போதிலும், குறுகலான பாலம் விரிவுபடுத்தப்படவில்லை.
இப்பாலத்தை விரிவுபடுத்தக்கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்பினா் கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பாலத்தை விரிவுபடுத்திக் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.