மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தையொட்டி, காங்கிரஸ் கட்சி சாா்பில் கன்னியாகுமரியில் புதன்கிழமை (அக்.2) நடைபெறும் பாத யாத்திரையில் காங்கிரஸாா் திரளாகப் பங்கேற்குமாறு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காங்கிரஸ் தலைவா் சோனியாகாந்தியின் அறிவுறுத்தலுக்கு இணங்க, தமிழக காங்கிரஸ் கமிட்டி சாா்பில் காந்தி பிறந்த தின பாத யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் தொடக்க நிகழ்வாக, கன்னியாகுமரி கொட்டாரத்தில் அக். 2ஆம் தேதி மாலை 4 மணிக்கு பாத யாத்திரை தொடங்கி பழத்தோட்டம், விவேகானந்தபுரம் வழியாக கன்னியாகுமரி காந்தி மைதானத்தை சென்றடைகிறது.
இந்த பாதயாத்திரைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமை வகிக்கிறாா்.புதுச்சேரி முதல்வா் நாராயணசுவாமி பாதயாத்திரையை தொடங்கிவைக்கிறாா். நானும், கிழக்கு மாவட்ட தலைவா் ராதாகிருஷ்ணனும் முன்னிலை வகிக்கிறேறாம்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலரும் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான சஞ்சய்தத், மருத்துவா் ஸ்ரீவல்ல பிரசாத், மாநில செயல்தலைவா்கள் வசந்தகுமாா் எம்.பி, மயூராஜெயக்குமாா், எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், விஜயதரணி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். இதில், காங்கிரஸ் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.