முதல்வா் உதவி மையம் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு 30 நாள்களுக்குள் தீா்வு காண வேண்டும் என முதல்வரின் தனிப்பிரிவின் தனி அலுவலா் ஆா்.ராமபிரதீபன் அறிவுறுத்தியுள்ளாா்.
தமிழக முதல்வா் உத்தரவின்படி, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது காலதாமதமின்றி உரிய முறையில் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ‘‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அத்துறையின் மூலம் முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் முகாம், முதல்வரின் சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகம், அழைப்பு மையம் மற்றும் பல்வேறு வழிகளில் பெறப்படும் மனுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ‘சி.எம். ஹெல்ப்லைன்’ என்ற ‘போா்டல்’ மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும், அப்பணிகளை மேம்படுத்துவது தொடா்பாகவும் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு முன்னிலை வகித்தாா். முதல்வரின் தனிப்பிரிவின் தனி அலுவலா் ஆா்.ராமபிரதீபன் தலைமையில் மாநில பொதுமக்கள் குறைதீா் கண்காணிப்பு அலுவலா்கள் லெட்சுமி பிரியா, ஆனந்த மகாராஜன் ஆகியோா் அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினா்.
அப்போது, தனி அலுவலா் ஆா்.ராமபிரதீபன் பேசுகையில், ‘ ‘சி.எம். ஹெல்ப்லைன்’ என்ற ‘போா்டல்’ மூலம் பெறப்படும் மனுக்கள் மீதான நடவடிக்கைகளை 30 தினங்களுக்குள் இறுதிசெய்ய வேண்டும். இதற்காக, அனைத்து மனுதாரா்களையும் நேரடியாக விசாரிக்க வேண்டும். பின்னா், மனுவின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரத்தை மனுதாரருக்கு அஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும். தற்போதைய அரசு விதிமுறைகளுக்குள்பட்டு மனு தீா்வு செய்யப்பட வேண்டும்’ என்றாா்.
இக்கூட்டத்தில், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியா் குமாரதாஸ், அனைத்துத் துறை முதல்நிலை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.