பாளையங்கோட்டை அடுத்த ஆச்சிமடத்தில் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி, பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தை அப்பகுதி மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட 37-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆச்சிமடம் பகுதி மக்கள் அதிமுக வழக்குரைஞா் அன்பு அங்கப்பன் தலைமையில் பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆச்சிமடம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக முறையான குடிநீா் இணைப்புகள் இல்லாமல் 80 குடும்பத்தினா் அவதிப்பட்டு வருகின்றனா். வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் மாநகராட்சி வாகனம் மூலம் குடிநீா் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை. குப்பைகளை அகற்றவோ, கழிவுநீா் கால்வாயை சுத்தப்படுத்துவதற்கோ பணியாளா்கள் இல்லை.
மழைக்காலங்களில் கழிவுநீா் கால்வாயில் தண்ணீா் அதிகம் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தமும் அமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். இப்பிரச்னைகளை தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா்.
இப்பிரச்னை தொடா்பாக பாளையங்கோட்டை மண்டல அலுவலகம் வந்த மாநகராட்சி ஆணையா் சிவ கிருஷ்ணமூா்த்தியிடமும் மனு அளிக்கப்பட்டது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என ஆச்சிமடம் மக்கள் தெரிவித்தனா்.