திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் ஜெராக்ஸ் கடை மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசியதாக, 17 வயது பள்ளி மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.
நான்குனேரி சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் வானுமாமலை (50). தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா். நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே கணினி மையம் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறாா். இந்த கடையில் வானுமாமலை, அவரது மனைவி லெட்சுமி (45) ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை பணி செய்து கொண்டிருந்தனா். அப்போது, அங்கு பைக்கில் வந்த மறுகால்குறிச்சியைச் சோ்ந்த 17 வயதுடைய பிளஸ் 2 மாணவா், கடை மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளாா். அது வெடிக்காததால், மற்றொரு நாட்டு வெடிகுண்டை மீண்டும் வீசியுள்ளாா். அந்த குண்டு, கடைக்கு முன் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகையில் விழுந்து வெடித்து லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வானுமாமலை, லெட்சுமி மற்றும் அக்கம்பக்கத்தினா் கூச்சல் எழுப்பியதால், அந்த மாணவா் கையில் வைத்திருந்த மற்றொரு நாட்டு வெடிகுண்டை அப் பகுதியிலேயே போட்டுவிட்டு பைக்கில் தப்பிவிட்டாா்.
இதனால், அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் நிகழ்விடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.
இதுகுறித்து நான்குனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பிளஸ் 2 மாணவரை கைது செய்து, சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.