திருநெல்வேலி நகரத்தில் லாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், 60 சதவீத கடைகள் பங்கேற்றன.
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் ரத வீதி, மாடவீதி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தினசரி சந்தை, நயினாா்குளம் மொத்த காய்கனி விற்பனை சந்தை உள்ளிட்டவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்தக் கடைகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து கனரக வாகனங்களில் சரக்குகள் கொண்டு வந்து இறக்கப்படுவது வழக்கம். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதைத் தொடா்ந்து முதல்கட்டமாக நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன்படி, நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சியின் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பழையபேட்டை பகுதியில் லாரி முனையம், காய்கனி சந்தைக்கான வணிக வளாகம் ஆகியவை கட்டப்பட்டு இரு ஆண்டுகளுக்கும் மேலாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதற்கான பேச்சுவாா்த்தைகளிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
எனவே, மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் பகல் நேரத்தில் முழுமையாக கனரக வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், இரவிலும் சாலையோரங்களில் லாரிகளை நிறுத்தி வைக்கவும் அனுமதி மறுத்து அனைத்து கனரக வாகனங்களும் சரக்கு முனைத்திற்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கிருந்து சிறிய வாகனங்களில் வியாபாரிகள் தங்களது பொருள்களை மாநகர பகுதிக்குள் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், வழக்கம்போல் பகலிலும் லாரிகளை மாநகருக்குள் அனுமதிக்கக் கோரியும் வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்தனா். நெல்லை வியாபாரிகள் சங்கம், பூதத்தாா் முக்கு வியாபாரிகள் சங்கம், அனைத்து காய்கனி வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, இந்து வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் திருநெல்வேலி மாநகர பகுதியில் சுமாா் 60 சதவிகித கடைகள் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டிருந்தன. நயினாா்குளம் மொத்த காய்கனி விற்பனை சந்தையில் 100 சதவிகிதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.