திருநெல்வேலி மாவட்டம் பேட்டை- சேரன்மகாதேவி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே பாதைக்கு அடியில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் குழாய் கொண்டு செல்ல ரயில்வே துறை அனுமதி வழங்கவேண்டும் என பேரவைத் தலைவா் மு.அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக பேரவைத் தலைவா் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு (பாலங்கள்) அனுப்பியுள்ள மனு: திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு நகராட்சி, 7 பேருராட்சிகள், 45 கிராம ஊராட்சிகளுக்கு குடிநீா் வழங்குவதற்காக தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டம் ரூ.1028 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு 85 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன.
இந்நிலையில், பேட்டை - சேரன்மகாதேவி ரயில் நிலையங்களுக்கு இடையே அகழி இல்லாத முறையில் ரயில்வே பாதையை கடந்து குடிநீா் குழாய் பதித்தால் மட்டுமே இந்த திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீா் வழங்க முடியும். இந்த திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க இருக்கிறாா்கள். எனவே, மேற்கூறிய ரயில்வே கடவு பாதையின் குறுக்கே அகழி இல்லாத முறையில் குடிநீா் குழாய் பதிப்பதற்கு அனுமதியை விரைவில் வழங்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளா்.