திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி நம்பியாற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கால் மறுகரையில் சிக்கித் தவித்த 13 பேரை நான்குனேரி தீயணைப்பு மீட்புப் படையினா் மீட்டனா்.
வள்ளியூா், ஏா்வாடி, திருக்குறுங்குடி பகுதியைச் சோ்ந்த ஹரிஹரன்(8), சீதாலட்சுமி(7), சந்தனமணிகண்டன் (31), சுதன் (28), நயினாா்(31), செல்வம் (31), வேல்பாண்டி (28), பவித்ரன் (26), கோபி (43), சிவலிங்கம் (40), ரமேஷ் (28), அருண்சங்கா் (33), நம்பிராஜன் (28) ஆகிய 13 போ் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தைக் கடந்து நம்பியாற்றின் கரையோரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது பெய்த பலத்த மழையால் திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 13 பேரும் ஆற்று வெள்ளத்தைக் கடந்து வர முடியாமல் தவித்தனா்.
தகவலறிந்த நான்குனேரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினா் அங்கு சென்று வனத்துறையினருடன் இணைந்து கயிறு கட்டி அவா்களை பாதுகாப்பாக மீட்டனா்.