திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மணிமுத்தாறு வனப்பகுதியில் அமைந்துள்ள மணி முத்தாறு அருவியில் நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்காக வந்து செல்கின்றனா்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் மணிமுத்தாறு அருவிக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து பயணிகளின் பாதுகாப்புக் கருதி வனத்துறையினா் அருவியில் குளிக்க புதன்கிழமை காலையிலிருந்து தடை விதித்தனா்.
மேலும், நீா்வரத்து சீராகும் வரை குளிக்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்றும், அருவியைப் பாா்வையிட அனுமதி உண்டு என்றும் வனத்துறை சாா்பில் தெரிவித்துள்ளனா்.