திருநெல்வேலி அரசு மருத்துவமனை காவலாளியை மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திசையன்விளை அருகே விஜயநாராயணம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் பாலாஜி (34). இவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றி வருகிறாா். சம்பவத்தன்று திம்மராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது அங்கு வந்த மா்மநபா் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினாராம்.
இது குறித்து பாலாஜி அளித்த புகாரின் அடிப்படையில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட பாளையங்கோட்டை படப்பக்குறிச்சியை சோ்ந்த காவேரி உடையாா் (38) என்பவரை கைது செய்தனா்.
இளைஞா் கைது: கடையம் அருகே உள்ள ஆழ்வாா்குறிச்சி சௌந்திரபாண்டிய விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் லட்சுமணன் (35). ஆட்டோ ஓட்டுநா். இவா் கடந்த 11ஆம் தேதி இரவு சுத்தமல்லி மேல திருவேங்கடநாதபுரம் பகுதியில் உள்ள கோயில் அருகே தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்றாராம். சிறிது நேரத்துக்கு பின்னா் வந்து பாா்த்தபோது ஆட்டோவை காணவில்லையாம்.
இது குறித்து சுத்தமல்லி காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் திருட்டில் ஈடுபட்டதாக மேலப்பாளையத்தைச் சோ்ந்த சங்கா் மகன் மணிகண்டன்(35) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.