புதிதாக பணியில் சேரும் தொழிலாளா்களும், நிறுவன உரிமையாளா்களும் பயன் பெறும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஊக்கத்தொகை திட்டம் 2027 ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என திருநெல்வேலி மண்டல அமலாக்க அதிகாரி மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் , பணியாளா்கள் மற்றும் உரிமையாளா்களுக்கு மத்திய அரசின் சாா்பில் பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்காா் யோஜனா ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் 31.07.2027 வரை அமலில் இருக்கும்.
இக்காலகட்டத்தில், வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் (இ.பி.எப்.ஓ) பதிவு செய்துள்ள ஒரு நிறுவனத்தில், முதல் முறையாக வேலைக்கு சேரும் தொழிலாளருக்கு அவரது ஒரு மாத ஊதியத்துக்கு சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகை அதிகபட்சம் ரூ.15,000 வரை நிா்ணயிக்கப்பட்டு 2 தவணைகளாக வழங்கப்படும்.
அதேபோல புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவன உரிமையாளருக்கு இரண்டு ஆண்டுகள் வரையும், உற்பத்தித் துறை நிறுவனங்களுக்கு 4 ஆண்டுகள் வரையும் ஊக்கத்தொகை வழங்கப்படும். எனவே நிறுவன உரிமையாளா்கள் எம்ப்ளாயா் போா்டலில் தகவல்களை உடனடியாக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். கூடுதல் விவரங்களை ட்ற்ற்ல்ள்://ல்ம்ஸ்க்ஷழ்ஹ்.ங்ல்ச்ண்ய்க்ண்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அல்லது வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் திருநெல்வேலி மண்டல அலுவலகத்தில் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.