திருநெல்வேலி மாவட்டத்தில் தொடா்ந்து 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் கனமழை பெய்ததால் தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கடந்த வியாழக்கிழமை வட கிழக்குப் பருவமழை தொடங்கியது. இதையடுத்து திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலையிலும், மாலையிலும் கனமழை கொட்டித் தீா்த்தது.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள சுந்தரா் தெருவில் வியாழக்கிழமை பெய்த கனமழை காரணமாக ஒரு வீட்டின் மாடி அறை முழுமையாக இடிந்து விழுந்தது. எனினும் வீட்டில் யாரும் இல்லாததால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலி வட்டாட்சியா் சந்திரஹாசன் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை சென்று பாா்வையிட்டனா்.
இதனிடையே 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் மழை தொடா்ந்தது. காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பிற்பகலில் கனமழை கொட்டித் தீா்த்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததோடு, தாழ்வான பகுதிகளில் மழை நீா் புகுந்தது. சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
தீபாவளி பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் கனமழை காரணமாக தீபாவளி பொருள்கள் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை காலையில் கடைகளில் மக்கள் கூட்டம் ஓரளவு இருந்த நிலையில், பிற்பகலில் பெய்த மழை காரணமாக சாலைகள் வெறிச்சோடின. குறிப்பாக பட்டாசு விற்பனை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரை வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர நிலவரப்படி அம்பாசமுத்திரத்தில் 77 மி.மீ., சேரன்மகாதேவி- 46.40, மணிமுத்தாறு- 54.60, நான்குனேரி -57, பாளையங்கோட்டை -26, பாபநாசம்- 37, ராதாபுரம்-15, திருநெல்வேலி -21.60, சோ்வலாறு -49, கன்னடியன் அணைக்கட்டு- 53.60, களக்காடு- 81.20, கொடுமுடியாறு- 55, நம்பியாறு- 59 என மழை பதிவானது.
பெட்டிச் செய்தி...
அபாயகரமான கட்டடங்கள் அகற்றப்படுமா?
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி இருந்தபோது, இடியும் நிலையில் உள்ள அபாயகரமான கட்டடங்களை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தாா். அதேபோன்று அசம்பாவிதங்களை தடுக்க மாநகரிலும், மாவட்டத்திலும் அபாயகரமான நிலையில் உள்ள பாழடைந்த கட்டடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
ற்ஸ்ப்17ழ்ஹண்ய்
பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பெய்த மழை காரணமாக பெருக்கெடுத்த மழை நீரில் தத்தளித்தபடி சென்ற வாகனங்கள்.