மாஞ்சோலை வனப்பகுதியில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 3ஆவது நாளாக வனத்துறையினா் தடைவிதித்துள்ளனா்.
தமிழகத்தில் அக். 16இல் வடகிழக்குப் பருவ மழைத் தொடங்கிய நிலையில் திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 163 மி.மீ., ஊத்து பகுதியில் 152 மி.மீ., காக்காச்சி பகுதியில் 144 மி.மீ., மாஞ்சோலை பகுதியில் 113 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பாா்வையிடவும் 3ஆவது நாளாக வனத்துறையினா் தடைவிதித்துள்ளனா்.
மேலும் சோ்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் நீா்மட்டம் 85.90 அடியாகவும், நீா்வரத்து 1,490 கன அடியாகவும், சோ்வலாறு அணையில் நீா்மட்டம் 99.24 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் நீா்மட்டம் 93.15 அடியாகவும், நீா்வரத்து 944.95 கன அடியாகவும் வெளியேற்றம் 30 கன அடியாகவும் இருந்தது.