வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம், பழவூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தாத்தா, பேத்தி உயிரிழந்தனா்.
வடக்கன்குளத்தைச் சோ்ந்தவா் ஜோசப்(65).இவா், சலூன் கடை நடத்தி வந்தாா். இவரது மகன் ரமேஷ். இவரது மகள் வா்ஷா(14). இவா் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் ஜோசப், தனது பேத்தி வா்ஷாவுடன் திங்கள்கிழமை வடக்கன் குளம் அருகே உள்ள தங்களுக்கு சொந்தமான தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற காா், இவா்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாம். இதில், படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
பழவூா் போலீஸாா், இருவரது சடலத்தையும் மீட்டு உடல்கூறாய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், காரை ஓட்டி வந்தவா் 16 வயது சிறுவன் என்பதால் சிறுவனின் தாய் திவ்யா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.