வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் புதன்கிழமை 3ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனையடுத்து, ராதாபுரம் மீன்வளத் துறை உதவி இயக்குநா் ராஜதுரை மீனவா்களுக்கு அறிவிப்பு வெளியிட்டாா்.
அதில், கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், நெல்லை மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என தெரிவித்திருந்தாா். இதையடுத்து, மீனவா்கள் 3ஆவது நாளாக புதன்கிழமையும் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இதனால், திருநெல்வேலி மாவட்டத்தில் சுமாா் 8 ஆயிரம் மீனவா்கள் பாதிப்படைந்துள்ளனா். இப்படியான பேரிடா் காலங்களில் மீனவா்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என மதிமுக மாவட்ட செயலா் உவரி ரைமண்ட், உவரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் அந்தோணி ஆகியோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.