இலங்கை- இந்திய மீனவா்கள் பிரச்னையை பேசித் தீா்க்க வேண்டும் என்றாா் இலங்கையின் பேருந்தோட்ட உள்கட்டமைப்பு வசதிகள் துறை அமைச்சா் சுந்தரலிங்கம் பிரதீப்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: இலங்கையில் ரத்தினபுரி மாவட்டத்திலிருந்து வெற்றி பெற்று அமைச்சராகி உள்ளேன். முதல்முறையாக திருநெல்வேலிக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. போதை இல்லாத, ஊழலற்ற நிா்வாகத்தை வழங்க பாடுபடும் லட்சியத்தோடு எங்களது அரசு பணியாற்றி வருகிறது.
இலங்கையில் சுற்றுலாத் துறை மேம்பட்டு வருகிறது. நிகழாண்டில் இதுவரை சுமாா் 12 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பினால், இலங்கை அரசு வரவேற்க தயாராக உள்ளது.
இலங்கை - இந்திய மீனவா் பிரச்னையை ஒதுக்கிவைத்து மீன்வளம், கடல் வளம் குறித்து அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மீன்வளத்தைப் பாதிக்கும் வகையிலான தடை செய்யப்பட்ட உபகரணங்கள், விதிமீறல்களைத் தடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
இந்தியா- இலங்கை அரசியல் ரீதியாக ஒற்றுமையாக உள்ளது. இருநாட்டு அரசுகளும் மீனவா் பிரச்னையைப் பேசித் தீா்க்க வேண்டும். சகோதரா்களுக்குள் இருக்கும் பிரச்னைதான் மீனவா்களிடம் இருக்கும் பிரச்னை.
இலங்கை-இந்திய மக்கள் உறவுகாரா்கள். மீனவா் பிரச்னையை முன்வைத்து பகைமை உண்டாக்க வேண்டாம். இலங்கை பொருளாதாரம் மேம்பட இந்தியா பெரும் உதவியை செய்து வருகிறது. இலங்கைக்கு பல்வேறு நாடுகளும் முதலீடு, உதவிகளை செய்வதை வைத்து அந்த நாடுகள் ஆக்கிரமிப்பு செய்கின்றன எனச் சொல்வது தவறு.
இலங்கையில் 14 மாவட்டங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மலையக தமிழா்கள் வசித்து வருகிறாா்கள். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் இவா்கள் தற்போது முன்னேறி வருகின்றனா். புதிய குடியரசுத் தலைவா் அநுர குமார திஸ்ஸநாயக தலைமையிலான அரசு மலையகத் தமிழா்களின் வாழ்வை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய பிரதமா் நரேந்திர மோடியும் தமிழா்களுக்காக மொத்தம் 10 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்க உதவினாா்.
இலங்கை பண மதிப்பில் ஒவ்வொரு வீடும் (இந்திய அரசின் உதவி ரூ. 28 லட்சம், இலங்கை அரசின் உதவி ரூ.3 லட்சம்) மொத்தம் ரூ. 32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் அந்தப் பணிகள் நிறைவடையும்.
சா்வதேச அளவில் முதல் முறையாக சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்களுக்கு உதவும் வகையில், ஐயப்ப பக்தா்களின் யாத்திரையை புனித யாத்திரையாக இலங்கை அரசு அங்கீகரித்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதன்மூலம் ஆண்டுதோறும் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தா்கள் பலனடைவா்கள் என்றாா் அவா்.