சென்னையில் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 62 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலகம் எதிரேயுள்ள ராஜாஜி சாலையில் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக மற்றும் மாநகர திமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் முன் மாநகரச் செயலர் ஆனந்தசேகரன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து மத்தியபாகம் போலீஸார் மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 62 பேரை கைது செய்தனர். இதில், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெகன், கோட்டுராஜா, மாவட்ட துணைச் செயலர் ராஜ்மோகன் செல்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவில்பட்டி: கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் அ.சுப்பிரமணியன் தலைமையில், பயணியர் விடுதி முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்ட திமுகவினர், அண்ணா பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, டி.எஸ்.பி. முருகவேல் தலைமையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 65 பேரை கைது செய்தனர்.
உடன்குடி: உடன்குடியில், ஒன்றியச் செயலர் பாலசிங் தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளர் சுதாகர், உதவி ஆய்வாளர் சுப்புலட்சுமி ஆகியோர் தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்ட 27 பேரை கைது செய்தனர்.
இப்போராட்டத்தில் திமுக ஊராட்சி செயலர்கள் மகாராஜன் (குலசேகரன்பட்டினம்), முருகேசன் (செம்மறிக்குளம்), மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், மேகராஜ், ஒத்தையாண்டி, சேகர், தங்கராசாத்தி ஜெயபால், முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சாத்தான்குளம்: சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் ஒன்றியச் செயலர் ஏ.எஸ்.ஜோசப் தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் காசியானந்தம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பசுபதி, ஒன்றிய அவைத் தலைவர் சவுந்திரபாண்டியன், ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் சண்முகசுந்தரம், முன்னாள் மாவட்ட பிரதிநிதி கெங்கை ஆதித்தன், ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலர் டேனியல்ராஜ், நகர விவசாய அணி அமைப்பாளர் வியாகப்பன், நகர இளைஞரணி அமைப்பாளர் முருகன், நகர தொழிலாளரணி அமைப்பாளர் ஞானராஜ், ஊராட்சி திமுக செயலர்கள் ராஜபாண்டி, தாமஸ், பால்ராஜ், ஜான்சன், பொன்ராஜ், ஜோசப் உள்பட 40 பேர் மறியலில் ஈடுபட்டனர். சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.