திருச்செந்தூரில் கடலோரக் காவல் படை பாதுகாப்பு ஒத்திகை
திருச்செந்தூர் அருகே கடலோரக் காவல் படை சார்பில் நடைபெற்ற "ஆப்ரேஷன் விஜில்' பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில்
திருச்செந்தூர் அருகே கடலோரக் காவல் படை சார்பில் நடைபெற்ற "ஆப்ரேஷன் விஜில்' பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில், கடல் வழியாக விசைப்படகில் வந்த தீவிரவாதிகள் வேடமிட்ட 9 பேரை கடலோர மற்றும் தமிழக காவல் துறையினர் பிடித்தனர்.
இதையொட்டி, தமிழக கடலோரக் காவல் படை, இந்திய கடலோரக் காவல்படை, இந்திய கடற்படை மற்றும் தமிழக காவல் துறையினர் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடலோரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டணம் அருகே ஜெ.ஜெ.நகர் மற்றும் ஜீவாநகர் கடற்பகுதியில் விசைப்படகில் தீவிரவாதிகள் வேடமிட்ட 9 பேர் தப்பிவந்தனர்.
தகவலறிந்து வந்த தூத்துக்குடி கடலோர காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜ், ஆய்வாளர் நவீன்குமார், உதவி ஆய்வாளர் ரத்தினகுமார்,திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொ) செந்தில்குமார், தாலுகா காவல் ஆய்வாளர் சோமன்ராஜன் ஆகியோர் படகில் கடலுக்குள் சென்று, விசைப்படகில் வந்த 8 பேர் மற்றும் ஜெ.ஜெ.நகர் கடலோர முள்புதருக்குள் மறைந்திருந்த ஒருவர் என 9 பேரை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பிடித்தனர். பின்னர் பிடிபட்ட 9 பேரும் ஆலந்தலையில் உள்ள கடலோரக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.