வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்புலிகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் திங்கள்கிழமை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தமிழ்புலிகள் அமைப்பு சார்பில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, அந்த அமைப்பின் மாவட்டச் செயலர் தாஸ் தலைமை வகித்தார். இதையடுத்து, போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர். போராட்டத்தின்போது, அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோல, தூத்துக்குடி தாளமுத்துநகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதிச் செயலர் அமல்ராஜ் தலைமை வகித்தார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் மார்க்சிஸ்ட் புறநகர் மாவட்ட கிளை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, புறநகர் மாவட்டச் செயலர் ராஜா தலைமை வகித்தார். இதில், கலந்து கொண்டவர்கள் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அருகே திங்கள்கிழமை இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்டச் செயலர் சு.விடுதலை செழியன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மண்டலச் செயலர் சொ.சு.தமிழினியன், திருச்செந்தூர் ஒன்றியச் செயலர் ஆ.சங்கத்தமிழன், கருத்தியல் பரப்புரை மாநில துணைச் செயலர் இர.பு.தமிழ்க்குட்டி, சமூக நல்லிணக்க பேரவை மாநில துணைச் செயலர் காயல் மாரியப்பன் உள்பட 41 பேரை திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொ) பிரதாபன், ஆய்வாளர் முத்துராமன் உள்ளிட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவில்பட்டி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கோவில்பட்டியில் நடைபெற்ற சாலை மறியலுக்கு வடக்கு மாவட்டச் செயலர் கதிரேசன் தலைமை வகித்தார். வழக்குரைஞரணி மாநிலத் துணைச் செயலர் பெஞ்சமின் பிராங்க்ளின், ஒன்றியச் செயலர் மாடசாமி, தொகுதிச் செயலர் முருகன் உள்பட சுமார் 30க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்தவுடன் டி.எஸ்.பி. ஜெபராஜ், ஆய்வாளர் ஆவுடையப்பன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, சுமார் 5 நிமிடம் நடைபெற்ற மறியல் கைவிடப்பட்டது.