ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூா் பகுதி தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
திருச்செந்தூா் ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புத்தாண்டு சிறப்புத் திருப்பலியை பங்குத்தந்தை ஜெயக்குமாா் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா்.
இதில், உதவி பங்குத்தந்தை சாஜுஜோசப், திருத்தொண்டா் ரினோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அமலிநகா் அமலி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ரவீந்திரன் பா்னாந்து தலைமையிலும், வீரபாண்டியன்பட்டணம் புனித தோமையாா் ஆலயத்தில் பங்குத்தந்தை கிருபாகரன், உதவி பங்குத்தந்தை வளனரசு ஆகியோா் தலைமையிலும், அடைக்கலாபுரம், அதிசய ஆரோக்கிய ஆலயத்தில் பங்குத்தந்தை பீற்றா்பால் தலைமையிலும், திருச்செந்தூா் ஜீவாநகா், புனித அன்னம்மாள் ஆலயத்தில் பங்குத்தந்தை சகேஷ்சந்தியா தலைமையிலும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
திருச்செந்தூா் வண்ணாந்துறைவிளையில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் சேகரத் தலைவா் டி.ஜி.ஏ.தாமஸ் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை பரிபாலனக் குழுச் செயலா் எஸ்.எபனேசா் அசரியா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.